“தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும், அதற் குரிய உயரம் இதுவரை கிடைக்க வில்லை. உலகின் தொன்மையான மொழிகளின் பட்டியலிலும், உலகின் தொன்மையான காவியங்களிலும் தமிழ் இல்லை” என்று கவிஞர் வைரமுத்து வேதனையுடன் தெரி வித்தார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழாவும், கவிஞர் வைரமுத்துவின் மணிவிழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: “உலக நாகரிக வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த பெரிய மொழி தமிழ் மொழி. படைகலன் மூலம் நாட்டை ஆளக்கூடாது என்பதையும் அறத் தால் நாட்டை ஆள வேண்டும் என்பதையும், சொல்லிக் கொடுத்தவன் தமிழன்.
ஜாதிக்கு எதிராக சித்தர்கள் காலத்திலேயே குரல் கொடுத்தது நமது தமிழர் இனம்தான். தமிழ் கவிஞர்கள் அப்போதே, காக்கை குருவி எங்கள் ஜாதி எனக் கவி பாடினர். ஆனால், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத் தாலும், செம்மொழிக்குரிய உயரம் இதுவரை கிடைக்கவில்லை.
அதேபோன்று உலகின் தொன்மையான மொழிகளின் பட்டியலில் தமிழ் இல்லை, உலகின் தொன்மையான காவியங்களிலும் தமிழ் இல்லை. இது எவ்வளவு வேதனையான ஒன்று?
யுனெஸ்கோ நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், உலகில் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழ் 8-வது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், மூன் றாயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழியை யாராலும் அழித்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இருந்தபோதும், தமிழ் மொழி யைப் பாதுகாக்கப் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண் டும். நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
பாரம்பரியமிக்க தமிழ் மொழியை நாம் இழந்தால் 3 ஆயிரம் ஆண்டுகள் சேர்த்து வைத்த செல்வத்தை இழப்பது போலாகி விடும். பள்ளிகளில் தமிழ்வழிப் பாடம் என்பது மிக முக்கியம்” என்றார்.