வடசென்னை மகாகவி பாரதி நகர் பகுதி மக்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரில் 153 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் வைத்திலிங்கம் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது: வடசென்னையில் உள்ள மகாகவி பாரதி நகரில் வடசென்னை புறநகர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீட்டு வசதித் திட்டத்தை 1981-ல் செயல்படுத்தியது.
இத்திட்டத்தில் பொது நோக்கங் களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் 173 பேர் குடிசை அமைத்து குடியிருந்து வந்தனர். இவர்களை வாரியம் 2006-ல் வெளியேற்றி அருகில் இருந்த சமூகக் கூடத்தில் தற்காலிகமாக தங்க வைத்தது. அவர்கள் வீட்டு வசதி கோரி அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.
முதல்வர் வழி காட்டுதலின்படி இவர்களின் கோரிக்கையை பரிசீலித்து சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் எழில்நகர் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியி ருப்பில் 153 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன என்றார் அமைச்சர்.