மதிமுக தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாட கம் வஞ்சித்ததாலும், காவிரி பாசனப் பகுதி உள்ளிட்ட தமிழகத் தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.
சம்பா சாகுபடிப் பயிர்கள் காய்ந்து கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் தமிழகம் முழுவதும் 45 விவசாயிகள் உயிரி ழந்தது வேதனை அளிக்கிறது. தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, குடிக்க தண்ணீர்கூட இல்லாமல் மக்கள் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வேலை இழந்து வறுமையில் வாடும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 2017 ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.