வானவில் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் 
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் அரசுப் பள்ளியில் படிக்கும் 6 முதல் ‌8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வானவில் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 200 அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வரையிலான மாணவ மாணவிகள் மொத்தம் 20 லட்சம் பேர் உள்ளனர்.

இவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ‌ பாடங்களில் புதிய செயல்முறை விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ‌வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு ‌முடிவு செய்தது.

அதன்படி திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வானவில் மன்றம் மூலம் 20 பள்ளிகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு என முதல் கட்டமாக ரூ. 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள ‌வானவில் மன்றத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒளி பாதை செயல்முறை விளக்க அறிவியலை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பிக்கள் சு.திருநாவுக்கரசர், திருச்சி சிவா, பள்ளிக்கல்வித்துறை முதுமைச் செயலாளர் காகர்லா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், உஷா மாநகராட்சி மேயர் அன்பழகன், கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இருதயராஜ், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதீப்குமார் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT