தமிழகம்

முதல்வர் ஓபிஎஸ் - பிரதமர் மோடி திங்கட்கிழமை சந்திப்பு; பின்னணியில் மூன்று காரணங்கள்: தமிழக அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

வார்தா புயல் நிவாரண நிதி, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை, நாடாளுமன்ற வளாகத்தில் ஜெ.சிலை வைக்க கோரிக்கை என்ற மூன்று காரணங்களுக்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மோடியை நாளை டெல்லியில் சந்திக்க உள்ளார்.

தமிழகத்தை புரட்டிப்போட்ட 'வார்தா' புயலால் பல கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் நிவாரண நிதி கேட்பதற்காகவும், பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காகவும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்புக்காக திங்கட்கிழமை நேரம் ஒதுக்கித் தருமாறு பிரதமர் அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தகவல் அனுப்பியுள்ளார். அனுமதி கிடைத்ததும் அவருடைய டெல்லி பயணம் உறுதி செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை அன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து, தமிழகத்தில் 'வார்தா' புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்கவும் மற்றும் தமிழகம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளிக்க உள்ளார்.

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டியும், ஜெயலலிதாவின் முழு திருவுருவ வெங்கலச் சிலையினை நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கடிதங்களை அளிக்க உள்ளார்'' என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT