வார்தா புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வார்தா புயலை எதிர்கொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படும் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப் பாதைகளில் உயர் அழுத்த மின்மோட்டார்கள் மற்றும் சூப்பர் சக்கர் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குழு வீதம் மீட்புப் பணிகளில் ஈடுபட மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இரவு நேரங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 18 உயர் மின்கோபுர விளக்குகள் தயாராக உள்ளன.
மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான 622 பம்புகள் பல்வேறு தாழ்வான பகுதிகளில் தயார் நிலை யில் உள்ளன. அது மட்டுமின்றி, முதன்முறையாக அதிக உயர் திறன் கொண்ட 75 எச்.பி பம்புகள் 2, 50 எச்.பி. பம்பு 1, 35 எச்.பி. பம்புகள் 7, 10 எச்.பி பம்புகள் 10 என மொத்தம் 20 பம்புகள் தனியாரிடமிருந்து வாடகைக்கு எடுத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளில் ஈடுபட 108 மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளும், பொதுமக்களை தங்கவைப்பதற்காக குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளுடன் 176 நிவாரண முகாம்களும் தயாராக உள்ளன. அவர்களுக்கு உணவு தயாரிக்க 4 பொது சமையல் கூடங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 80 நபர்கள், 8 மிதவை மீட்பு படகுகளுடன் தயாராக உள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தற்போது கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் கடற்கரை ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் குளிப்பதற்கும், வேடிக்கை பார்ப்பதற்கும் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை யாக முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
அச்சமடைய வேண்டாம்
வார்தா புயலை எதிர்கொள்ள மாநகராட்சி அனைத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.
புயலை எதிர்கொள்வது தொடர்பாக நேற்று மாலை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் க.பணீந்திரரெட்டி, மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் பணீந்திரரெட்டி நிருபர்களிடம் கூறும்போது, கனமழையால் போக்குவரத்து பாதிக்க வாய்ப்புள்ளதால், தேவையின்றி வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மழைநீர் வடிவதற்காக குடிநீர் வாரிய ஆள் நுழைவு மூடிகளை பொதுமக்கள் திறக்க கூடாது என்றார்.
சென்னையில் புகார் தெரிவிக்க!
சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், 044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570 ஆகிய தொலைபேசி எண்களிலும், 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 9445477205 ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் புகார் தெரிவிக்கலாம்.