தமிழகம்

பிரதமர் தலைமையிலான கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் டிச. 4-ல் டெல்லி பயணம்?

செய்திப்பிரிவு

சென்னை: ஜி-20 அமைப்பு தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் டிச. 5-ல் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில், அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரதமர் வரும் டிசம்பர் 4-ம் தேதி ஏற்கிறார்.

இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.

இந்நிலையில், ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதல்வர்கள் கூட்டத்தை டிச. 5-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்க மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தான் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக அவர் வரும் டிச. 4-ம் தேதி டெல்லி செல்லலாம் என்றும், 5-ம் தேதி கூட்டத்தை முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் முதல்வரின் அதிகாரப்பூர்வ பயண விவரம் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, அவர் டிசம்பர் 4-ம் தேதி தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT