முச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி தொண்டை, நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுவிடுவதை எளிதாக்கும் டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை வந்தார். மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் 11.33 மணிக்கு காவிரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்று மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றார்.
அங்கு கருணாநிதியை ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி மற்றும் மருத்துவர்களிடம் கருணாநிதியின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி ராகுல் கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த ராகுல், பகல் 11.57 மணிக்கு வெளியே வந்தார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவரைப் பார்த்ததும் ஹலோ சொன்னேன். அவரது உடல்நிலை நன்றாக இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்.
தமிழகத்தின் மூத்த தலைவரான கருணாநிதி மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவரை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என விரும்பினேன். இன்று அது நிறைவேறியுள்ளது. கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். கருணாநிதி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை அவரிடம் தெரிவித்தேன்.
இவ்வாறு ராகுல் கூறினார்.
பின்னர் தனி விமானம மூலம் அவர் புறப்பட்டுச் சென்றார். ராகுல் காந்தி வருகை காரணமாக காவிரி மருத்துமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.