சென்னை: இந்தியாவும், இந்து சமயமும் வளர்ச்சி அடைந்தால் உலகில் அமைதி ஏற்படும் என காஞ்சிகாமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் கூறினார். விஷ்வ இந்து பரிஷத் அகில உலக முன்னாள் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் எழுதிய ‘மனதோடு பேசுகிறேன் - ஓர் ஆன்மிக தேசியவாதியின் காலடிச்சுவடுகள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
புத்தகத்தை வெளியிட்டஅல்லயன்ஸ் நிறுவனத்தின் நிவாசன் வரவேற்புரையாற்றினார். விழாவில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் அருளுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: வேதாந்தம் எழுதியுள்ள மனதோடு பேசுகிறேன் என்ற புத்தகத்தில் தனது கருத்துகளை தெளிவாகவும், நாகரிகமாகவும், உறுதியாகவும் தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இது உத்வேகத்தை அளிப்பதோடு, வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.
பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களும், இளைஞர்களும் முக்கியமாக படிக்க வேண்டியது இப்புத்தகம். அல்லயன்ஸ் நிறுவனம் தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் பரப்பும் நோக்கில் பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்தப் புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.
வேதாந்தம் இந்து மதத்தை பரப்புவதற்கு பிரச்சாரம் செய்ததோடு, ஓராசிரியர் பள்ளியை உருவாக்கினார். அதேபோல், கிராமப்புற பூசாரிகளின் வாழ்க்கை மேம்படவும் பாடுபட்டார். சமுதாயம் வளரும்போது சமயத்தையும் வளர்க்க வேண்டும். நல்லோர்களின் இடமாக இந்தியா உள்ளது. சனாதன தர்மமும், இந்து சமயமும் வளர்ச்சி பெற வேண்டும். இதற்கு பல சிந்தனைகளை வளர்க்கவேண்டும். இந்தியாவும், இந்து சமயமும் வளர்ச்சி அடைந்தால் உலகில் அமைதி ஏற்படும். இவ்வாறு ஸ்ரீ விஜயேந்திரர் கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமிபுத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், நாட்டில் இந்துக்களுடைய ஒற்றுமை குறித்து ஒரு பிரச்சினை உள்ளது. நாட்டில் 80 சதவீத இந்துக்கள் உள்ளனர். ஆனால், ராமர் சேது பாலத்தைக்காக்க நீதிமன்றம் செல்ல வேண்டி உள்ளது. நம் நாட்டில் 4 லட்சம் கோயில்கள் அரசாங்கத்தின் வசம் உள்ளது. அதை விடுவிக்க போராட்டம் நடத்தப்பட உள்ளது. திராவிடத்தில் ஜாதி, மதம் இல்லை. நாட்டில் இந்துமத மறுமலர்ச்சி ஏற்பட வேதாந்தம் போன்றவர்கள் அவசியம் வேண்டும் என்றார்.
விழாவில் ஏற்புரை ஆற்றிய வேதாந்தம், நான் செய்தது சாதாரண பணி. 1949-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 73 ஆண்டுகளாக ஒரே கொள்கையுடன் உள்ளேன். இந்து மதத்தில் என்னுடைய பணி தொடரும் என்றார்.
மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் பேசுகையில், ‘‘கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித் மக்களை தாய் மதத்துக்கு மீண்டும் கொண்டுவர வேதாந்தம் தொடர்ந்து பாடுபட்டார். மீனவர்கள் வலை பின்னுவதற்கும், படகு செய்வதற்கும் உதவி செய்தார். தொழிலதிபர் பிர்லாவிடம் சென்று 150 கோயில்களை கட்ட நிதியுதவி கேட்டார்.
அவர் அளித்த நிதியை சிக்கனமாக பயன்படுத்தி 200 கோயில்களை கட்டினார். ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டினார். வேதாந்தம் 200 கிராமங்களில் கோயில்களை கட்டினார்’’ என்றார். விழாவில், திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், கோயம்புத்தூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேசுவர ஸ்வாமிகள், கண்ணந்தாங்கல் மங்களபுரி ஷேத்திரம் 108 சக்திபீடத் திருக்கோயில் நிறுவனர்ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.