தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டினை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவு குறித்து இன்று வீரமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 74 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைகள், தலைசிறந்த வெளிநாட்டு டாக்டர்களின் மருத்துவ உதவிகள் எல்லாம் பெற்று, உடல்நலம் தேறி வந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார் என்ற தகவல் அறிந்து பெரும் துயரத்திற்கு ஆளானோம்.
திடீரென்று கடந்த 4.12.2016 ஞாயிறு மாலை அவரது உடல்நலனில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து உடனடியாக நவீன மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டும், அவை பயனற்றுப் போனநிலையில் காலமானார் என்பது கோடானுகோடி மக்களின் உள்ளங்களைப் பிளக்கக்கூடிய கொடிய செய்தியாகும்.
எது நடக்கக்கூடாது என்று நாட்டு மக்களும் நாமும் எதிர்பார்த்தோமோ, அது இறுதியில் நடந்தே விட்டது!சோகமும், துயரமும், துன்பமும் பெருவெள்ளக்காடாய் மக்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது.
இவ்வளவு பெரும்அளவில் விசுவாசத்தினை பெறற்கரிய செல்வமாக தனது தொண்டர்களிடம் பெற்ற ஒரு அரசியல் கட்சித் தலைவரைக் காண்பது அரிதினும் அரிது!
திராவிட இயக்க ஆட்சியின் தொடர்ச்சியாக அவர் திகழ்ந்த காரணத்தால், தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டினை இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாம் அட்டவணைப் பாதுகாப்புடன் (76வது சட்டத்திருத்தம்) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சரித்திர சாதனையை நிகழ்த்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தினை அளித்து திராவிடர் கழகம் மகிழ்ந்தது.
ஏழை எளிய மக்களின் வாழ்வில் அவரது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். எவ்வளவு கவலைப்பட்டாரோ, உதவினாரோ அதே உணர்வுடன், கனிவுடன் நடந்துகொண்டதால் அபரிமிதமான அன்பை மக்களிடம் பெற்றார். அவரது துணிவு- இந்தியாவில் எந்தப் பெண்மணியிடமும் காணமுடியாத ஒன்று. நெருப்பில் பூத்த வெற்றி மலராகவும், எதிர்ப்புகளைத் தாண்டும்- தாங்கும் வீராங்கனையாகவும் அச்சம் என்பது மடமை; எதிர்ப்பு என்பது நான் சந்திக்கும் களம் என்று வாழ்ந்து காட்டிய அவருக்கு ஈடுஇணையும் அவரே!
அவரது கட்சித்தொண்டர்களும், தோழர்களும் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - ஆகியவற்றைக் கடைப்பிடித்து அவர் காட்டிய வரலாற்றுப் பாதையையே தொடரவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
மறைந்த ஜெயலலிதா பெற்றுத் தந்த ஆட்சியினை, அவர் வகுத்த பாதையில் மிகுந்த ஒற்றுமையுடன் நடத்தி செல்வார்கள் என்று நம்புகிறோம்; நடத்திச் செல்ல வேண்டும் என்றும் விழைகின்றோம். இவ்வாட்சி திராவிடர் ஆட்சியாகவே தொடரவேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
சோதனையான காலகட்டங்களில் எல்லாம் கண்களை இமை காப்பதுபோல் காத்து, கடைசி வரை எதையும் பாக்கி வைக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, ஜெயலலிதாவைக் காப்பாற்ற முயன்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு உளப்பூர்வமான ஆறுதலை நன்றியுடன் கூறுவது நமது கடமையாகும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜெயலலிதாவின் பிரிவால் வாடும், வருந்தும் - அவர் ஆட்சியில், அவரது தலைமையில் பணியாற்றிய சக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்!
சமூக நீதி காத்த வீராங்கனைக்கு நமது வீரவணக்கம்'' என்று வீரமணி கூறியுள்ளார்.