தமிழகம்

ரூ.1,366 கோடி கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளில் 3,633 பக்க குற்றப்பத்திரிகை - மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக 2012 முதல் 2015 வரை மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு காவல் நிலையங்களில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மேலூர், உசிலம்பட்டி, மதுரை நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ளன.

மொத்தமுள்ள 98 வழக்குகளில் 23 வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை தடை விதித் துள்ளது. எஞ்சிய 75 வழக்குகளில் இதுவரை 56 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி, மதுரா கிரானைட்ஸ், பி.ராஜேசகரன் உள்ளிட்டோர் மீது ரூ.1365.96 கோடி கிரானைட் மோசடி தொடர்பாக கீழை யூர், மேலூர், ஒத்தக்கடை காவல் நிலையங்களில் பதிவு செய்த 4 வழக்குகளில் 3,633 பக்க குற்றப் பத்திரிகையை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி செல்வ குமார் முன்னிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலா, டிஎஸ்பி சூர்யமூர்த்தி, ஆய்வாளர்கள் பிரகாஷ், ராஜாசிங், முத்துபாண்டி ஆகியோர் நேற்று தாக்கல் செய்தனர்.

கீழையூர், செட்டிக்குளத்தில் பாறைபுறம்போக்கில் அனுமதி யின்றி ரூ.277.84 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக மதுரா கிரானைட் நிறுவனத்தைச் சேர்ந்த சி.பன்னீர் முகமது உட்பட 21 பேர் மீது கீழவளவு போலீஸாரும் திருவாதவூர் பாறை புறம்போக்கில் அனுமதியின்றி ரூ.17.68 கோடி மதிப்பில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது தொடர்பாக சி.பன்னீர் முகமது உள்பட 20 பேர் மீது மேலூர் போலீஸாரும், திண்டியூர் கண்மாயில் சட்டவிரோதமாக ரூ.662.78 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக பி.ஆர்.பழனி்ச்சாமி மற்றும் 21 பேர் மீதும், இடையப்பட்டியில் ஊருணி புறம்போக்கில் ரூ.407.66 கோடி மதிப்பில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக ஆர்.ராஜசேகரன் உள்பட 7 பேர் மீது ஒத்தக்கடை போலீஸார் பதிவு செய்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டது.

அரசு நிலங்களில் சட்டவிரோத மாக எடுக்கப்பட்டு பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற் களை அரசுடமையாக்கக் கோரி மதுரை முன்னாள் ஆட்சியர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த 43 வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணையை வரும் பிப். 8-ம் தேதிக்கு நீதி்த்துறை நடுவர் ஒத்திவைத்தார்.

பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி கிரானைட் நிறுவனங்களை சேர்ந்த 6 பேர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கிரானைட் குவாரி தொழிலில் உடல் பாகங்களை இழந்த ஊழியர் ஒருவர் ஜிஜி கிரானைட் நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை டிச. 28-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT