தமிழகம்

நகைக்கடை அதிபர் வீடு, கடையில் இரண்டாவது நாள் சோதனையில் ரூ.100 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்?

செய்திப்பிரிவு

நகைக்கடை அதிபர் வீடு, கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பெரியமேடு அரிஹந்த் சிவசக்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நகைக் கடை அதிபர் ஹிரானி. ராஜஸ்தானைச் சேர்ந்த இவரது வீட்டிலும், அதே பகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள அவரது நகைக்கடையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் காட்டப்படாத ரூ.10 கோடி, 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பணமும் பழைய ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள்.

இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஹிரானி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வங்கியில் கோடிக்கணக் கான பணம் முதலீடு செய்துள்ள தகவலும் பரவியுள்ளது. ஹிரானி விபத்தில் சிக்கிக் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாம். நேற்று அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுக் கடுக்கான கேள்விகளைக் கேட்டுள் ளனர்.

குடும்பத்தினரிடம் விசாரணை

குறிப்பாக, ‘‘நீங்கள் ராஜஸ்தானில் இருக்கும்போது உங்களது சொத்து மதிப்பு எவ்வளவு? சென்னை வந்த பிறகு உங்களது சொத்து விபரம் என்ன? தற்போது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள பெரிய தொகை எப்படி வந்தது? பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு நீங்கள் ஏன் பணத்தை வங்கியில் செலுத்தவில்லை? வருமான வரி கட்டுகிறீர்களா? கட்டினால், எவ்வளவு கட்டுகிறீர்கள்? உங்களது தொழில் பின்னணி? தொழில் கூட்டாளிகள் யார்? யார்?’’ என பல்வேறு கேள்விகளைக் கேட்டு அதிகாரிகள் துளைத்தெடுத்துள்ளனர்.

தொடர்ந்து அவரது மனைவி, மகன், மகளிடமும் இதே பாணியில் கேள்விகளைக் கேட்டுள்ளனர். அனைவரிடமும் தனித்தனி அறையில் வைத்து ஒரே நேரத்தில் ஒரே வகையான கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, அவர்கள் 4 பேரும் அளித்துள்ள பதில்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்பிட்டு முரண்பாடான பதில்கள் குறித்து மீண்டும் விசாரித்து வருகின்றனர். வீட்டு வேலைக்காரியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல், ஹிரானி செல்போனில் பதிவான சில எண்களை சுட்டிக் காட்டி, ‘இந்த எண் யாருடையது? அவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? இவருடன் ஏன் நீங்கள் அடிக்கடி பேசியுள்ளீர்கள்?’ என்பது போன்ற கேள்விகளையும் கேட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதற்கிடையில், விசாரணை நடத்தப்பட்ட ஹிரானி வீட்டை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் ஹிரானி வீட்டிற்குள் யாரும் நுழைந்து விடாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு வெளியிடப்பட வில்லை.

SCROLL FOR NEXT