கச்சத்தீவு புதிய அந்தோணியார் தேவாலயத்தின் அர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் கோயிலில் வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ள அர்ச்சிப்பு நிகழ்ச்சியில் தமிழக மீனவர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை மறுக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
ராமநாதபுரம் மன்னர்களின் ஆளுகையில் இருந்து, 1974-ஆம் ஆண்டில் மத்திய அரசால், தமிழக மக்களின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டினார்.
தற்போது அங்கு புதிய அந்தோணியார் கோயில் கட்டப்பட்டு, அதன் அர்ச்சிப்பு விழா வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்தோணியார் கோயில் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்கும் ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் இவ்விழாவிலும் கலந்து கொள்ள அனுமதி கோரினார்கள். தமிழக மீனவர்களை அனுமதிக்கும்படி மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தமிழக தலைமைச் செயலாளரும் கடிதம் எழுதினார். ஆனால், இக்கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.
புதிய அந்தோணியார் கோயிலில் சிறிய அளவில்தான் விழா நடப்பதாகவும், அதில் பங்கேற்க இலங்கையை சேர்ந்த பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை எனும் நிலையில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதிக்க இயலாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதிய அந்தோணியார் கோயிலில் நடைபெறும் விழா சிறியதா, பெரியதா? என்பது பிரச்சினையில்லை. தங்களால் பெரிதும் நேசிக்கப்படும் இறைவனுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தில் முதன்முறையாக நடைபெறும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்பது ராமநாதபுரம் பகுதி மீனவர்களின் விருப்பமாகும். இதற்கு இல்லாத காரணங்களைக் கூறி தடை போட மத்திய அரசு முயலக்கூடாது.
அதேபோல், இந்த விழாவில் பங்கேற்க இலங்கை மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் தமிழக மக்களுக்கும் அனுமதி இல்லை என்பது ஏற்க முடியாத வாதமாகும். கச்சத்தீவில் புதிய அந்தோணியார் தேவாலயத்தை வேண்டுமானால் இலங்கையை சேர்ந்தவர் கட்டியிருக்கலாம். ஆனால், கச்சத்தீவு காலம் காலமாக தமிழக மீனவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பகுதியாகும். இலங்கையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றால் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க முடியும் என்று எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் புனித அந்தோணியார் கோயில் திருவிழாக்களில் ராமநாதபுரம் மீனவர்கள் கலந்து கொள்ளலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் விழாவில் தான் பங்கேற்க வேண்டும் என்றோ, மற்ற காலங்களில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றோ அதற்கு அரசு அர்த்தம் கற்பிக்கக் கூடாது.
கச்சத்தீவில் நடைபெறும் விழாக்கள் தமிழக மீனவர்களின் உணர்வுடன் கலந்த ஒன்று என்பதால், 7 ஆம் தேதி நடைபெறவுள்ள கச்சத்தீவு புதிய அந்தோணியார் தேவாலயத்தின் அர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.