உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரையில், தமிழக அரசின் நிவாரணப் பணிகளில் திருப்தி அடையக் கூடிய வகையில், இல்லாதது வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் இன்று மாலை திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 'வார்தா' புயல் பாதிப்புகளையும், சேதங்களையும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
''கடந்த மூன்று நாட்களாக சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்வதோடு அல்லாமல், அவர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகளை செய்து வருகிறோம்.
அந்த வகையில், தற்போது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். இந்த அரசைப் பொறுத்தவரையில், உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரையில், நிவாரணப் பணிகளில் திருப்தி அடையக் கூடிய வகையில், போதுமானதாக இல்லாதது வேதனையளிக்கிறது.
கடந்த மூன்று நாட்களாக 'வார்தா' புயலின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்து இருப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு சொந்தமான சவுக்குத் தோட்டங்களும், வாழை மரங்களும் பாதிப்புகளுக்கு ஆளாகி, அழிந்து போயிருக்கிறது.எனவே அவர்களுக்குரிய நஷ்ட ஈட்டினை இந்த அரசு உடனே வழங்கிட வேண்டும்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் பல பகுதிகளுக்குச் செல்லும்போது, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அவர்களை முற்றுகையிட்டு, இன்னும் முறையாக தங்களுக்கு நிவாரணம் வந்து சேரவில்லை என்று போராடக் கூடிய நிலைதான் தொடர்கிறது.
எனவே அரசாங்கம் உடனடியாக மின்னல் வேகத்தில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். குறிப்பாக விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில், அவர்கள் தேசிய வங்கிகளில், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கக் கூடிய கடனையாவது முழுமையாக, உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
முதல்வர் கடிதம் எழுதுவதோடு நின்று விடாமல், டெல்லிக்கு நேரடியாகச் சென்று, பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், மத்தியில் இருந்து புயலால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய இடங்களை, ஒரு குழுவினை அமைத்து ஆய்வு செய்து, சேத விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள அனுப்பி வைக்க வேண்டும்.
மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்கிறதோ இல்லையோ, மாநில அரசு உடனடியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, போர்க்கால அடிப்படையில் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு உரிய நிதியுதவிகளையும் செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.