மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள திமுக தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால் அவரை சந்திப்பதை தவிர்க்குமாறு திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று வீடு திரும்பியுள்ளார். மேலும் சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், அதுவரை நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, கருணாநிதியை பார்க்க நேரில் வருவதை தவிர்த்து திமுகவினரும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும் ஒத்துழைக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக கடந்த இரு மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஊட்டச் சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 1-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு வீடு திரும்பினார்.
இந்நிலையில், வீடு திரும்பினாலும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அவரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.