இரா.முத்தரசன் | கோப்புப் படம் 
தமிழகம்

மத்திய தொழிலாளர் விரோத சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த அதிகாரிகள் முயற்சி: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கும்பகோணம்: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தமிழகஅரசு உரிய கால அவகாசம் வழங்கி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இதேபோல, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது, வாக்காளர்களைக் குறைக்க முயற்சிக்கும் சதியோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இதைதேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்த நடவடிக்கையை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. தொழிலாளர் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்.

திருநெல்வேலியில் டிச.1, 2, 3 ஆகிய தேதிகளில் ஏஐடியுசி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழக மற்றும் கேரள மாநில அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT