ராஜீவ் காந்தி படுகொலையின்போது சம்பவ இடத்தில் இருந்து, படுகாயமடைந்து உயிர் பிழைத்தவர் முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயா. தற்போது காங்கிரஸில் மாநிலச் செயலராக உள்ளார். இவர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு வெளிநாடுகளில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பிரபாகரன் குறித்து பேசுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில பாஜகதுணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அனுசுயாவிடம் கேட்டபோது, ‘‘அனாமதேய எண்ணில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. அநாகரிகமாகவும் பேசுகின்றனர். பாதுகாப்பு கேட்டு காவல் துறையில் புகார் அளிக்க இருக்கிறேன்’’ என்றார்.
‘‘இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்’’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.