சேலம் ஆவின் மூலம் ரசாயன கலப்பில்லா டெட்ராபாக்கெட் மில்க் ஷேக் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இவை வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் முடிவும் பரிசீலனையில் உள்ளது என சேலம் ஆவின் நிறுவன பொது மேலாளர் சாந்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் 17 ஆவின் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் சேலம் ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. ஆவின் நிறுவனம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பால் பொருட்கள் மூலம் இனிப்பு வகைகள், டெட்ராபாக்கெட் மில்க் ஷேக் தயாரிப்பு பணி தொடங்கப்பட்டது.
எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல் இயற்கை முறையிலான பொருட்களை கொண்டு ஆவின் மூலம் டெட்ரா பாக்கெட் மில்க் ஷேக் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டு தோறும் இதன் விற்பனை கூடி வருகிறது.
இதுகுறித்து ஆவின் மேலாளர் சாந்தி கூறும்போது, ‘‘ஆவின் மூலம் தயாரிக்கப்படும் மில்க் ஷேக் 12 வகையான ஃபிளேவர்களில் விற்பனை செய்கிறோம். கேரட், பாதம், மேங்கோ, ஆப்பிள், பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் உள்பட 12 வகையான மில்க் ஷேக் எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல் தரமான முறையில் தயாரித்து விற்பனை செய்வதால், மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கேரட், பாதாம் உள்ளிட்டவையை வாங்கி அதனை அரைத்து மில்க் ஷேக் தயாரிக்க பயன்படுத்துகிறோம். தனியார் நிறுவனங்கள் ரூ.25 விற்னை செய்யும் மில்க் ஷேக்கை, ஆவின் நிறுவனம் ரூ.20 விலையில் விற்பனை செய்கிறது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 800 ஏஜென்ட்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2014-15-ம் ஆண்டு டெட்ராபாக்கெட் 35 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2015-16-ம் ஆண்டு 44 லட்சம் பாக்கெட் விற்பனை அதிகரித்தது, 2016-17 நவம்பர் வரை 57 லட்சம் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. வரும் மார்ச் மாத இறுதியில் நடப்பாண்டு 75 லட்சம் டெட்ரா பாக்கெட் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களிலும் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் உள்ள ஆவின் ஃபெடரேஷன் ஒப்புதலுடன் வெளிமாநிலங்களுக்கு ‘ஆவின்’ பொருட்கள் விற்பனை செய்திட பரிசீலனையில் உள்ளது.
அதேபோல, ஆவின் மூலம் மைசூர்பா, அல்வா, பால்கோவா ஆகியவை கிலோ ரூ.440 விலையிலும், கோவா கிலோ ரூ.400 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவைகளுக்கும் மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது’’ என்றார்.