தமிழகம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: முத்தரசன் பேட்டி

செய்திப்பிரிவு

பருவ மழை பொய்த்ததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து அரசிதழில் வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியைத் தொடங்கி வைத்த அக்கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் அளித்த பேட்டி:

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி இறப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையை நம்பித்தான் வேளாண்மையும், குடிநீர் ஆதாரமும் உள்ளது. இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்த நாட்களில் பருவமழை தொடங்கவில்லை.

நமக்கு பெய்ய வேண்டிய மழை அளவில் 70 சதவீதம் வரை பெய்யவில்லை. இனி எஞ்சிய நாட்களில் இயற்கை எந்த அளவு ஒத்துழைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இதற்கிடையே, கர்நாடகமும் நமக்குரிய காவிரி நீரை வழங்கவில்லை. மத்திய அரசு ஒருதலைப் பட்சமாக நடந்ததால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. நெல், பருத்தி, கரும்பு, மஞ்சள் என அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவநம்பிக்கையில் உள்ளனர். இதுவரை எங்களுக்குக் கிடைத்த தகவல்படி தமிழகத்தில் பரவலாக தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியாலும் 21 விவசாயிகள் இறந்துள்ளனர்.

ஆகையால், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டு, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியைப் பெற வேண்டும். 21 விவசாயிகள் இறந்த பின்பும், அரசு மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாதிப்பிலிருந்து சாதாரண மக்கள் மீளவில்லை. தொழில், வர்த்தகம், சிறு வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் இல்லாத முறைக்கு மக்கள் பழக வேண்டும் என்கிறார் பிரதமர். கிராமப்புறம் சார்ந்த, 70 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ள நாட்டில் இது பொருத்தமற்ற அறிவிப்பு. சிவகாசியில் பட்டாசுத் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். திருச்சி அருகே வெடிவிபத்தில் இறந்த 19 பேரின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT