சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில்சனாதனம் நிலவுவதாக அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் இரா.நற்சோனை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆண்நிர்வாகிகள் தங்களை அவதூறாகப் பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு தீர்வு காணப்படுமா என்றுதொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ந்து விசிக போராடிவருகிறது. வலது சாரி இயக்கங்களுக்கு எதிரான கருத்தியல் ரீதியான மோதல்கள் தொடர்கின்றன. கட்சித் தலைவர் திருமாவளவன், வலது சாரி இயக்கங்களுக்கு எதிராக தீவிர அரசியலை முன்னெடுத்துவருகிறார்.
அண்மையில் மனுஸ்மிருதி தொடர்பான ஒரு லட்சம்புத்தகங்களை விநியோகிக்கும்முன்னெடுப்பை அவர் தொடங்கிவைத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்தனர். மேலும், அனைத்து மேடைகளிலும் சனாதன எதிர்ப்பை வலியுறுத்திப் பேசி வருகிறார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலேயே சனாதனம் நிலவுவதாக பெண் நிர்வாகி ஒருவர் குற்றம் சுமத்தினார். கடந்த 23-ம் தேதி கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் திருமாவளவனுக்கு மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய இயக்கத்தின் மாநிலச் செயலாளர் இரா.நற்சோனை, ஆண் நிர்வாகிகள் தங்களை அவதூறாகப் பேசுவதாக கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, “கட்சிக்குள்ளேயே மேல் நிலையில் இருந்து கீழ்நிலை வரை சனாதனம் நிலவுகிறது” என்று ஆவேசமாகப் பேசினார்.
அப்போது தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த நிர்வாகியை திருமாவளவன் அழைத்து ஏதோகூறினார். உடனே அவர் நற்சோனையை தொடர்ந்து பேச வேண்டாம் என்று தடுத்தார். ஆனாலும், நற்சோனை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் அவர் பேசிக் கொண்டிருந்த மைக் அணைக்கப்பட்டது. அப்போது கீழே அமர்ந்திருந்த பெண் நிர்வாகிகள் சப்தம் கூச்சலிட்டனர்.
இதையடுத்து, மேடையில் தனது இருக்கைக்கு வந்த நற்சோனை மற்றும் திருமாவளவன் இடையே ஓரிரு நிமிடங்கள் காரசாரமான விவாதம் நிலவியது.
பின்னர் பேசிய திருமாவளவன், "கட்சியில் ஒரு லட்சம் ஆண்கள் இருந்து, 100 பேர் பெண்களாக இருப்பதால் ஆதிக்கம் இயல்பாக வெளிப்படுகிறது. இதை ஒழிக்க, ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் அரசியலில் பங்கேற்றால், பெண்களைப் பற்றி இழிவாக யாரும் பேசமாட்டார்கள்.
நற்சோனை தனது களப்பணிகளின்போது ஏற்பட்ட கசப்பை, பாதிப்பை உணர்ச்சிவசப்படாமல் இங்கே பேசினார். இதுபோன்றமுரண்பாடுகள், உரையாடல்களுக்கு வரும்போதுதான் அதற்குத் தீர்வுகாண முடியும். அவர்பேசியதை நான் வரவேற்கிறேன்.தொடர்ந்து போராடுவதன் மூலம்தான் இந்த அவதூறுகளையும், அவமானங்களையும் வென்றெடுக்க முடியும்" என்றார். உட்கட்சிப் பிரச்சினையை மேடையில் வெளிப்படுத்தியது குறித்து விளக்கம் அறிய நற்சோனையியைத் தொடர்பு கொண்டபோது, பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, நற்சோனை பேசிய வீடியோ பதிவை, வலதுசாரி இயத்தினர் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர். இது தொடர்பாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், "சனாதனத்தின் உள்ளீடே ஆணாதிக்கம். அது குடும்பத்திலும், நிறுவனங்களிலும், கட்சிகளிலும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. அனைத்து மட்டங்களிலும் ஆணாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே விசிகவின் கொள்கை நிலைப்பாடு. அதனால்தான் பெண்கள் இந்தக் கருத்தை எங்கள் கட்சியில் துணிவாகப் பேச முடிகிறது.
இந்த ஜனநாயகம் மற்ற கட்சிகளில் உண்டா? விசிகவில் மட்டுமே உண்டு. அதற்குக் காரணம் கட்சியின் தலைவர் திருமாவளவன்" என்று தெரிவித்துள்ளார். இப்படியான விளக்கங்கள் வரப்பெற்றாலும் உட்கட்சி பிரச்சினைகளைத்தீர்க்க வேண்டும், பெண்களை அவதூறாக பேசுவோர் மீது உடனடிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது.