சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கிண்டி கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் 1,640 அடி தொலைவுக்கு பிரம்மாண்ட மெட்ரோ ரயில் மேம்பால வளைவுப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த பாதை தரை மட்டத்திலிருந்து 100 அடிக்கு மேல் உயரத்தில் அமையவுள்ளது.
சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான (47 கி.மீ.) வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் 48 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.
100-க்கும் மேற்பட்ட தூண்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ள இடங்களில், அவற்றை இணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் 1,640 அடி தொலைவுக்கு மேம்பாலப் பாதையில் பிரம்மாண்டமாக ரயில் பாதை அமையவுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் 1,640 அடி தொலைவுக்கு 410 அடி ஆரத்துடன் கூடிய வளைவுப் பாதை அமைகிறது. கத்திப்பாரா மேம்பாலம், முதல்கட்ட மெட்ரோ ரயில் பாதை ஆகியவற்றுக்கும் மேலே இந்தப் பாதை அமைய உள்ளது.
தரைமட்டத்தில் இருந்து 100 அடிக்கு மேலான உயரத்தில் இந்த பாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 6 பிரம்மாண்ட தூண்கள் அமைக்கப்பட உள்ளன. உயரமாகவும், வளைவுடனும் அமைய உள்ளதால், இது சவாலான பணியாக இருக்கும். விரைவில் பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தபால் பெட்டி நிலையம்: மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், மாதவரம் பால் பண்ணை-தபால் பெட்டி ஆகிய இரு மெட்ரோ நிலையங்களுக்கு இடையே தொலைவு குறைவு என்பதால், தபால் பெட்டி நிலையம் அமைப்பதை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் பால் பண்ணை- தபால் பெட்டி இடையே தொலைவு மிகவும் குறைவாக உள்ளது. தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் மிகக் குறைந்த அளவில்தான் மக்களின் பயன்பாடு இருக்கும். எனவே, தபால் பெட்டி நிலையத்தை நீக்க முடிவு செய்து உள்ளோம். மக்கள் பயன்பாடு குறைந்த இடத்தில் ரயில் நிலையம் அமைப்பதன் மூலமாக, பல கோடி ரூபாய் வீண் செலவுதான் ஏற்படும். இதைத் தவிர்ப்பது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.