தமிழகம்

கடைக்கோடி நிகழ்வையும் உற்றுநோக்கி நடவடிக்கை; காங்கிரஸில் இதுவரை இல்லாத மாற்றம்: ரூபி மனோகரன் பெருமிதம்

செய்திப்பிரிவு

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தாலும், கட்சியின் தலைமை பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கே ஏற்றதாலும், கட்சியில் இதுவரை இல்லாத மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சியின் கடைக்கோடி நிகழ்வையும் உற்றுநோக்கி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், மாநில பொருளாளர் ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கடந்த 24-ம் தேதி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ‘இந்த நடவடிக்கை இயற்கை நீதிக்கு எதிரானது’ என்று கூறி, ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய உத்தரவையும், இந்த மோதல் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு நடத்தி வரும் விசாரணையையும் நிறுத்தி வைப்பதாக கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்தார்.

மிகப்பெரிய மாற்றம்: இதுகுறித்து கேட்டபோது, ரூபி மனோகரன் கூறியதாவது: முன்பெல்லாம் மாநில அளவிலான உள்கட்சி பிரச்சினைகளில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிடுவது இல்லை என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், தற்போதைய நடவடிக்கை மூலம் அகில இந்திய காங்கிரஸில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கிறேன்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தால் தொண்டர்கள், மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி, தேசிய தலைமை பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கே ஏற்றது போன்ற மாற்றங்களை தொடர்ந்து, கடைக்கோடி தொண்டர்களின் நிகழ்வையும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை உற்றுநோக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக நன்றி.

எனது உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம். நான் காங்கிரஸ் வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபடுவேன். எங்களுக்குள் உள்ள பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வோம். கட்சிக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்த மாட்டேன். 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை நிலைநாட்ட ஒற்றுமையுடன் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT