தமிழகம்

மருத்துவக் கவுன்சில் தேர்தலை மின்னணு முறையில் நடத்தக் கோரி வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் நேர்மையாக நடைபெற, ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு வாக்குப்பதிவு முறையை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மற்றும் தேசியமருத்துவ ஆணையம் பதில்அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு டிச.19-ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை வழக்கம்போல நடத்தாமல், ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்தக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் தபால் வாக்குமுறையை பின்பற்றுவது என்பதுமுறைகேடுகளுக்கே வழிவகுத்துள்ளது. எனவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு மூலமாக மின்னணு வாக்குப்பதிவு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை இதே கோரிக்கைக்காக தொடரப்பட்டு நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து, விசாரணையை டிச.5-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT