திமுக உறுப்பினர்களை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பேரவைத் தலைவர் தனபாலிடம் தேமுதிக உள்ளிட்ட 6 கட்சிகளின் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
சட்டப்பேரவையில் கடந்த 22-ம் தேதி தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பதில் அளித்து பேசியபோது, திமுகவை விமர்சித்தார். அமைச்சரின் பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து 4-வது முறையாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதால், கூட்டத் தொடர் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தேமுதிக கொறடா சந்திரகுமார், சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சவுந்தரராஜன், ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), ரங்கராஜன் (காங்கிரஸ்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஆகியோர் பேரவைத் தலைவர் ப.தனபாலை வியாழக்கிழமை சந்தித்து கூட்டாக ஒரு மனுவை கொடுத்தனர்.
‘திமுக உறுப்பினர்கள் அனை வரையும் நடப்புக் கூட்டத் தொட ரில் இருந்து முற்றிலும் நீக்கி வைத் திருக்கும் உத்தரவை மறுபரி சீலனை செய்ய வேண்டும். வரும் நாட்களில் அவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்’ என மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனு குறித்த தனது முடிவை பேரவைத் தலைவர் தனபால் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.