புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர்மருத்துவமனை. மத்திய அரசின்கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் இரு ஆண்டுகளாக தொற்றா நோய்களான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய்ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து, மாத்திரைகளை ஜிப்மர் நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. கரோனாவுக்கு பிறகு தரத்தொடங்கியது.
நடுவில் மாத்திரை பற்றாக்குறை ஏற்பட்டு மத்திய அரசுநேரடியாக தலையிட்டு, இப்பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. மக்கள் குறைந்த விலையில் மருந்து பெறவும் மருந்தகங்களும் இங்கு உள்ளன.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் நாள்தோறும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். குறிப்பாக புற்று நோய், நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று போன்ற சிகிச்சை எடுத்தவர்களுக்கு மாதந்தோறும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்குவது நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் சிகிச் சைக்கு வந்து செல்லும் இந்தமருத்துவமனையில் இலவச மருந்து, மாத்திரைகள் தர 6 கவுண்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதில் ஒரு கவுண்டர்முதியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நீண்ட தொலைவு பயணித்து வந்து காலையில் சிகிச்சை பெற்று மருந்து வாங்கவும் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
" உடல்நிலை சரியில்லாமல் அதிகாலையிலோ, முதல் நாள்இரவிலோ புறப்பட்டு வருகிறோம். காலையில் சிகிச்சை பெற்று விட்டு, மருந்து வாங்க வந்தால் இங்கேயும் அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். இரண்டு மணி நேரம் வரை வரிசையில் நிற்க வேண்டியுள்ளதால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படுகிறது.
மத்திய அரசு அதிக நிதியைஏழைகளுக்காக ஒதுக்குகிறது. அந்நிதியை திருப்பி அனுப்பாமல் பயன்படுத்தலாம். 'நோயாளிகளின் நிலையை மருத்துவ நிர்வாகம் கவனத்தில் கொண்டு கூடுதலாக மருந்து தரும் கவுண்டர்களை இயக்கினால் ஏழைகளுக்கு உதவியாக இருக்கும்" என்று நோயாளிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பேர் நாள்தோறும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.