தமிழகம்

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

விவசாயிகள் தற்கொலை செய்வதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட உதவியாளரை அவசரக் கோலத்தில் இந்த அரசு ஏற்கெனவே நீக்கியது. அது சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் உரிமையை நிலைநாட்டக் கூடிய வகையில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம் அதை விசாரித்து, உதவியாளரை நீக்கியது தவறு, உடனே அந்த உதவியாளரை எதிர்க்கட்சித் தலைவருக்கு உதவியாளராக நியமிக்க வேண்டும் என தீர்ப்பு கொடுத்தது.

அந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டு ஒருமாத காலம் ஆகிறது. ஆனால், இதுவரையில் அந்த உதவியாளர் நியமிக்கப்படவில்லை. அது குறித்து கேட்பதற்காக வந்தோம். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபுவும், கு.க.செல்வமும் நேரில் சென்று சட்டப்பேரவையின் செயலாளரை சந்தித்துக் கேட்டபோது, உதவியாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என உறுதிமொழி அளித்திருக்கிறார். அந்த அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

சட்டமன்றக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற மனுவினை சபாநாயகரிடம் மட்டுமல்ல, ஆளுநரையும் நேரில் சந்தித்து கொடுத்தோம். இதுவரை முறையான எந்த பதிலும் வரவில்லை. எனவெ இதுகுறித்தும் நாங்கள் நீதிமன்றம் செல்வதற்கு தயாராக இருக்கிறோம்.

தொடரும் விவசாயிகள் மரணம் குறித்து அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் அமைப்புகள் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, அதில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தின் நகலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரடியாக கொடுத்திருக்கிறோம். அவரும் கூட்டுகிறேன் என்று கூறி இரண்டு மாதத்திற்கு மேலாகிறது. இதுவரைக்கும் கூட்டவில்லை. இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, விவசாயப் பெருங்குடி மக்கள் 35-க்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்திருக்கிறார்கள். அவர்களுக்குரிய நிவாரணத் தொகையை கொடுக்க வேண்டும். அமைச்சர்களாவது இறந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டுமென்று நாங்கள் பலமுறை கூறியிருக்கிறோம். உடனே ஒரு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை சொல்லியிருக்கிறோம். இதுவரையில் அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தைப் பார்க்க வருகிறார்கள். அந்த இல்லத்தைப் பாதுகாக்க வேண்டியது, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் கடமை. நான் அதில் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால், முதல்வருக்கு என்ன பாதுகாப்பு இருந்ததோ, அத்தனை பாதுகாப்புகளும் அவருடைய தோழியாக இருக்கக் கூடிய சசிகலாவுக்கு எந்தவகையில் கொடுக்க முடியும் என்கிற கேள்வியை தான் கேட்டேனே தவிர, முதல்வர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கூடாது என்று நான் என்றைக்கும் சொல்லவில்லை.

தலைவர் கருணாநிதி நன்றாக இருக்கிறார். இது குறித்து காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெளிவான அறிக்கையை கொடுத்துள்ளார்கள்'' என்று ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT