திருச்சி: திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.28-ம் தேதி வரவுள்ளார். இதையொட்டி, பள்ளியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நவ.28-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அன்று காலை 10 மணியளவில் திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் கல்வித் (STEM on Wheels) திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், அறிவியல் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்கு ஆகியவை குறித்து 100 தன்னார்வலர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின்போது, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மு.மதிவாணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் மற்றும் கல்வித் துறையினர் உடனிருந்தனர்.