பாரதியார் பல்கலைக்கழக பணி நியமனம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்காவிட்டால் பட்டங்களை பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்போவதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஈரோடு சிவகிரியில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியர், இணை, உதவிப் பேராசிரியர் என 80 பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டன. அதில் விதிமீறல்கள் நடந்ததாகவும், பணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் உயர் கல்வித் துறையின் உத்தரவை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில், பல்கலைக்கழக பதிவாளர் மோகன் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து உயர்கல்வித் துறைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இப்படி பாரதியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், பணி நியமன முறைகேடுகளை விசாரிக்க அரசு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்; இல்லாவிட்டால் தாங்கள் பெற்ற முனைவர் பட்டங்களை பல்கலைக்கழகத்துக்கே திருப்பி அனுப்ப உள்ளதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட பட்டதாரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று முறையிட்டனர்.
பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கூறும்போது, ‘பாரதியார் பல்கலைக்கழக பணி நியமனத்தில் எஸ்சி (பி) பிரிவில் விண்ணப்பித்தவர்களை புறக்கணித்துள்ளனர். இனச்சுழற்சி முறையில், வேறு பிரிவில் விண்ணப்பித்து நேர்காணல் செய்யப்பட்டவர்கள், பொதுப்பிரிவில் நேர்காணல் இல்லாமலேயே தேர்வாகியுள்ளனர். ஒவ்வொரு துறைக்கும், நிலைக்குழு அங்கீகரித்த துறை வல்லுநர்களே விண்ணப்பங்களை பரிசீலிக்க, விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்ய வேண்டும். ஆனால் நேர்காணல் அப்படி நடக்கவில்லை. தேர்வுக் குழுவுக்கு சாதகமானவர்களே அதிகளவில் தேர்வாகியுள்ளனர். பேராசிரியர், இணை, உதவிப் பேராசிரியர் பணிக்கு, அந்தந்த துறை சார்ந்தவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடந்து முடிந்த நேர்காணலில் வேறு துறையைச் சேர்ந்தவர்களையும், தொலைதூரக் கல்வியில் பட்டம் பெற்றவர்களையும் நியமித்துள்ளனர். ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடத்த வேண்டாம் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டும், அதை மீறி கூட்டம் நடத்தி பணி ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே பணி நியமன முறைகேடுகளை வெளிக் கொண்டுவர விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். பணி நியமனம் பெற்றவர்களின் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும்.
1982 முதல் அறிவியல் துறை இயங்குகிறது; 1000-க்கும் மேற்பட்ட முதுநிலை, ஆராய்ச்சி பட்டதாரிகள் இங்கு பயின்றுள்ளோம். ஆனால் எங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு துறையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்பிரச்சினையில் தீர்வு கிடைக்கா விட்டால், முனைவர் பட்டங்களை பல்கலைக்கழகத்துக்கே கொடுத்துவிடும் அளவுக்கு மனம் உடைந்துள்ளோம்’ என்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.