தமிழகம்

காவல்துறையினரின் நியாயமான வேண்டுகோளை நிறைவேற்றுக: வாசன்

செய்திப்பிரிவு

காவலர்களின் நியாயமான வேண்டுகோளை தமிழக அரசு ஏற்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் குறிப்பிட்ட கால நேரமின்றி, கடுமையாக பணி புரிந்து வருகின்றனர்.

சென்னை பெருநகர ஆயுதப்படை 2 காவல் துணை ஆணையாளர்கள், 5 உதவி ஆணையர்கள் ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் என 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். மேலும் 3 ஆயிரம் பேர் சிறப்புக் காவல் படையிலிருந்து புதிதாக ஆயுதப்படையில் சேர்ந்ததால் மொத்தம் 8 ஆயிரம் காவலர்கள் பணியில் உள்ளனர்.

இதில் பணிமூப்பு அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் காவலர்களை அவர்கள் கேட்ட இடத்திற்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 1,000 காவலர்களுக்கு மட்டும் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கி விடுவிக்கப்பட்டதால் அவர்கள் பணியிடம் மாறிச் சென்று விட்டனர். ஆனால் மீதமுள்ள காவலர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியும், விடுவிக்கப்படாமல் இருப்பதால் இவர்கள் தீராத மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் சென்னையில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வேதனைக்குரியது. இவர் தனது பணிச்சுமை, மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றால் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் துரதிஸ்டவசமானது. உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவலர்களின் பணி மிகவும் இன்றிமையாதது, அவசியமானது, முக்கியமானது. காரணம் நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். எனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு பணி நேரம், பணியிட மாறுதல், பணிச்சுமை, அலைக்கழிப்பு ஆகியவற்றை முறையாக, சரியாக மேற்பார்வை செய்து காவலர்களின் நியாயமான வேண்டுகோளை தமிழக அரசு ஏற்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மேலும் காவல்துறையில் பணிபுரிபவர்கள் தங்களின் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு பணி நேரத்தையும், விடுமுறையையும் முறைப்படுத்திட வேண்டும். எனவே பிற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகள், விடுமுறைகள் போன்ற அனைத்தும் காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு கிடைப்பதற்கும் உண்டான வழிமுறைகளை கடைப்பிடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT