நாகர்கோவில்: ராமானுஜரும், விவேகானந்தரும் ஆன்மிகத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினர் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். மனித குலத்துக்கும், ஆன்மிகத்துக்கும் பகவத் ராமானுஜர் ஆற்றிய அரும்பணிகளை விளக்கும் ‘ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம்` என்ற இருநாள் நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் நேற்று தொடங்கியது.
கர்நாடக மாநிலம் மேல்கோட்டை யதுகிரி யதிராஜமடம் பீடாதிபதி ஸ்ரீராஜநாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைத்து பேசியதாவது: கன்னியாகுமரி ஒரு புண்ணியபூமி. விவேகானந்தர் உலகின் பார்வையில் படுவதற்கு முன்பு, அவரது கன்னியாகுமரி வருகை முக்கியமானதாக அமைந்துள்ளது. அதன்பிறகு அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை, இந்தியாவின் தர்மம் மற்றும் அறத்தை உலகுக்கு சொல்லும் விதமாக அமைந்தது.
எனது கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த இருபெரும் மகான்களில் ஒருவர் ஸ்ரீராமானுஜர். மற்றொருவர் சுவாமி விவேகானந்தர். இவர்கள் இருவரும் மக்கள் நலனுக்காக ஆன்மிகத்தை சிறப்பாக வழிநடத்தியவர்கள். இந்த சமூகத்துக்கு அமைதியை கொண்டு வர வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார்.
அவரது பணிகள் இந்தியாவில் அருள் புரட்சியை உருவாக்கின. இறை நம்பிக்கை மட்டுமே தெய்வீக குடும்பச் சூழலை உருவாக்கும். இந்தியாவில் தீவிரவாத சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் வெற்றிபெற முடியாது.
கன்னியாகுமரியில் திறக்கப்பட இருக்கும் ஸ்ரீராமானுஜர் சிலையானது, தென்கோடிக்கு அருள்பாலிக்கும் அடையாளமாக திகழும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரிவரும் பயணிகள் இதுவரை கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்த்துரசித்து சென்றனர். இனி ஸ்ரீராமானுஜர் சிலையும் பயணிகள் தரிசித்து செல்லும் வகையில் அமையும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயர், ஆழ்வார் திருநகரி ரங்க ராமானுஜ ஜீயர், விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ உட்பட பலர்கலந்துகொண்டனர். விழாவில் ஹோமங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், ராமகாதை, ராமானுஜர் வாழ்க்கைவரலாற்றை சித்தரிக்கும் நாட்டியநாடகம் போன்றவை நடைபெற்றன.
விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜர் சிலையை இன்று பகல் 12 மணியளவில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். அதைத் தொடர்ந்துதென்னிந்திய துறவிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது.