கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர். படம் : ஜெ.மனோகரன் 
தமிழகம்

விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளை தொந்தரவு செய்யக் கூடாது: எஸ்டிபிஐ

செய்திப்பிரிவு

கோவை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர், நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாநகர காவல் ஆணையரை சந்தித்து கோவையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளை தொந்தரவு செய்யக்கூடாது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதி இல்லை.

சமீபத்தில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதனை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சமூக நல்லிணக்கத்துக்கு மங்களூரு சம்பவம் ஓர் அச்சுறுத்தல். இந்த விவகாரத்தில் மத, மொழி பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை விளம்பர மேனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் ஒரு இணை அரசாங்கம் நடத்த நினைக்கிறார். தமிழகத்துக்கு ஆளுநர் நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைக்கிறார்கள். என்.ஐ.ஏ விசாரணை என்ற பெயரில் சிறுபான்மையினரை குற்றப் பரம்பரையாக்க பார்க்கிறார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT