தமிழகம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை: ராஜ்நாத் சிங்கிடம் ஆளுநர் விளக்கம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்பு மூலம் தெரியப்படுத்தியது.

இதனையடுத்து அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய நோய் நிபுணர்கள், சுவாசயியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை விரைந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 12 மணியளவில் அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வர் உடல்நிலையைக் கேட்டறிந்தார்.

இன்று (திங்கள்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநரிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை. தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை'' என்று ராஜ்நாத் சிங்கிடம் கூறினார்.

,

          
SCROLL FOR NEXT