மதுரை: மதுரை மாநகராட்சியில் திமுக குழுத் தலைவரை நியமிக்க அக்கட்சி கவுன்சிலர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி, இவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர். கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் அமைச்சருக்கு எதிர்கோஷ்டியான திமுக மாநகர், புறநகர் மாவட்டச் செயலாளர்கள் ஆதரவாளர்களாக உள்ளனர். அதனால், மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. மாநகராட்சியில் போதிய நிதியில்லாததால் கவுன்சிலர்களால் மக்களுடைய அத்தியாவசியப் பணிகளைக்கூடச் செய்ய முடியவில்லை.
மேயர் இந்திராணியால், நிதி அமைச்சரிடமும், கட்சித் தலைமையிடமும் நேரடியாகப் பேசி மாநகராட்சிக்கு கூடுதல் நிதி பெற்றுக் கொடுக்க முடியவில்லை. மாநகராட்சி விவகாரங்களில் மேயர் கணவர் தலையீட்டால் திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர்.
அதிகாரிகள் மேயர் பேச்சை கேட்பதால் அதிருப்தியடையும் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டங்களில் மோசமான சாலைகளின் நிலை, குடிநீரில் கழிவு நீர் கலப்பது, பாதாள சாக்கடை பிரச்சினைகளை கிளப்பி மேயருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். திமுக மாநகர் செயலாளர் உட்கட்சி தேர்தலுக்கு பிறகு மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்குமான மோதல் வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்நிலையில், மற்ற மாநகராட்சிகளைப் போல் மதுரை மாநகராட்சியில் திமுக குழுத் தலைவரை தேர்வு செய்ய கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாமன்றக் குழுத் தலைவர், செயலாளர், கொறடா பதவிகளை உருவாக்கினால் மாநகராட்சி நிர்வாகத்தில் மேயருடைய தயவு இல்லாமலே வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என திமுக கவுன்சிலர்கள் நினைக்கின்றனர்.
இது குறித்து திமுக கவுன்சிலர்கள் கூறியதாவது: மேயர் இந்திராணி, தனது ஆதரவு கவுன்சிலர்கள் வார்டு களில் மட்டும் தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுக்கிறார். அதிமுக கவுன்சிலர்கள் சிலரது வார்டுகளுக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால், தனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத திமுக கவுன்சிலர்கள் வார்டுகளை புறக்கணிக்கிறார்.
அதனால், திமுக கவுன்சிலர்களுக்கான மாமன்றக் குழுத் தலைவர், செயலாளர், கொறடாவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்தக் குழுவை நியமித்தால் மாநகராட்சியில் நிறைவேற்றப் போகும் தீர்மானங்களைக் கொண்டு வருவது, மாமன்றக் கூட்டத்தில் என்ன பேச வேண்டும், எந்தெந்த திமுக கவுன்சிலர்கள் பேச வேண்டும் போன்றவற்றை முடிவு செய்யும் அதிகாரம் கிடைக்கும். இந்தக் குழு ஒப்புதல் இல்லாமல் மேயர் தன்னிச்சையாக எந்த தீர்மானங்களையும் மாமன்றத்தில் கொண்டு வர முடியாது.
மற்ற மாநகராட்சிகளில் மேயருக்கான மறைமுகத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் திமுக கவுன்சிலர்களுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்து வாக்களிக்க வைத்துள்ளனர். ஆனால், மதுரை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் மேயருக்கான மறைமுகத் தேர்தலில் ஒரு பைசா கூட வாங்காமல் கட்சித் தலைமையின் கட்டளையை மதித்துச் செயல்பட்டோம். அதனாலேயே மேயர் போட்டியில்லாமல் எளிதாக வெற்றிபெற முடிந்தது.
சமீப காலமாக மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர்கள், அவர்கள் குடும்பத்தினர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குகின்றனர். மேயரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், மாமன்றக் குழுத் தலைவர், செயலாளர், கொறடா நியமிப்பது அவசியமாகிறது என்று கூறினர்.