விழுப்புரம்: செஞ்சி பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (40). இவரது மனைவி ஜெயந்தி. பூபாலன் சைக்கிளில் சென்று சுக்கு காபி விற்று வருகிறார். எளிய குடும்பத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு ஜெகதீஷ் (6) என்ற சிறுவனும், ரேணுகா என்ற இரண்டரை வயது சிறுமியும் உள்ளனர்.
ரேணுகா, செஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 3-வது நாளிலேயே சுவாச பிரச்சினை மற்றும் உணவு குழாய் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்புப் பிரிவில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுவாச பிரச்சினைக்காக தொண்டை பகுதியில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். குழந்தையின் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அறுவை சிகிச்சை செய்த ஓட்டை வழியாக வெளியேறுகிறது.
உணவு குழாயில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து, தொப்புள் வழியாக டியூப் மூலம் திரவ உணவை செலுத்தும் வசதியை அறுவை சிகிச்சை மூலம் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். கடந்த இரண்டரை வருடங்களாக டியூப் மூலம் திரவ உணவை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து குழந்தை ரேணுகாவின் தந்தை பூபாலன் கூறியது: என் குழந்தையின் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண, அறுவை சிகிச்சை செய்து சிறுகுடலில் இருந்து தொண்டை வரை உணவு குழாயை பொருத்த வேண்டும் என்று சென்னையில் அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை செய்ய கடந்த மே18-ம் தேதி முடிவு செய்திருந்தனர். அங்கு சென்றோம். ‘குறைந்த பட்சம் 13 கிலோ எடை இருந்தால்தான் இந்த அறுவை சிகிச்சை செய்ய முடியும். குழந்தையின் உடல் எடை அதற்கும் கீழே உள்ளது’ என்று கூறினர்.மீண்டும் எங்களை 8.2.2023 அன்று வருமாறு கூறி அனுப்பி விட்டனர்.
இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை காண்பித்த போது, ‘ரூ 5 லட்சம் செலவாகும்; பணம் இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம்’ என்று தெரிவித்தனர். போதிய வசதி இல்லாததால் குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளனர்.
“சமயங்களில் வயிற்றில் சொருகியுள்ள உணவு குழாயை பிடுங்கி விடுவதால், அதை மீண்டும் பொருத்த சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது. தற்போது குழந்தைக்கு பால் மற்றும் பால் பவுடரை திரவ உணவாக கொடுக்கிறோம். இரவு பகலாக தூக்கமின்றி குழந்தையுடன் போராடி வருகிறோம்.
எங்களது நிலை கண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சில தன்னார்வலர்கள் உதவி செய்தனர். ஆனாலும், அறுவை சிகிச்சை ஒன்றே நிரந்தர தீர்வாகும். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் வரை அரசு மருத்துவமனையிலேயே சேர்த்து குழந்தைக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்” என்று தெரிவித்தார்.