கடலூர்: அனைத்துத் துறைகளிலும் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிச் சிக்கல் உள்ளிட்ட நிர்வாகச் சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1928-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் முதல் இரண்டு இணைவேந்தர்களால் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு, தமிழ் மொழி மற்றும் தமிழிசை வளர்ப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 94 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் ஒரு தொன்மையான பல்கலைக்கழகமாகும். திராவிட இயக்கத்தின் தொட்டிலாக விளங்கி மொழிப்போருக்கு முன்னோடியாக நிகழ்ந்ததும் இப்பல்கலைக்கழகமே ஆகும்.
மொழி, அறிவியல், கலை என அனைத்துப் பிரிவுகளிலும் தலைச் சிறந்த ஆய்வறிஞர்களை உருவாக்கி, உலகம் முழுவதும் அவர்கள் பரவிச் சென்று சாதனை படைக்க காரணமாக இருந்ததும் இந்தப் பல்கலைக்கழகமே ஆகும்.
இவ்வளவு சிறப்புமிக்க இப்பல்கலைக்கழகம், தனது மூன்றாவது இணைவேந்தர் காலத்தில் தவறான நிர்வாகம், ஊழல், மிகைப்பணி நியமனம், தவறான நிதி மேலாண்மை மற்றும் பல காரணங்களால் நலிவுற்றது. 2012-ம் ஆண்டில் வரலாறு காணாத நிதிச் சிக்கலில் சிக்கியது. இதனால் அப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் மற்றும் மாணவர்கள் பெரும் துயருக்கு ஆளாகினர்.
‘எங்களுக்கு மட்டும்தொடரும் பாரபட்சம்’: இது பற்றி ஜாக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் கூறுகையில், “தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பெற்று விட்ட 7- வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகைகள் இதுவரை ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர், ஊழியர்களுக்கான சட்டபூர்வமான பதவி உயர்வுகள் மற்றும் பணப் பயன்கள் வழங்கப்படவில்லை. அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார். ‘சிறப்பு நிதி அவசியம்’
ஆட்பா (அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்) சங்கத் தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், “பல்கலைக்கழகத்தின் முறைகேடுகளை களைய ஆட்சிக்குழு மற்றும் கல்விக் குழுக்களுக்கு நியமன உறுப்பினர் முறையை ரத்து செய்துவிட்டு தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும். 2013-ம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத்தின் துணைவிதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பல்கலைக்கழக நிதிச் சிக்கலை தீர்க்க தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டும்” என்றார்.
கிடப்பில் போடப்பட்ட பரிந்துரைகள்: 2013-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்பல்கலைக் கழகத்தை தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, ஷிவ்தாஸ் மீனா என்ற ஐஏஎஸ் அதிகாரியை நிர்வாக அதிகாரியாக நியமித்தார். அவரும் இரண்டு ஆண்டுகள் ஆய்வுக்குப் பின், மிகை ஆசிரியர்கள், ஊழியர்களை அயற்பணியிட மாற்றம் செய்தல், ஆசிரியர், ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட பணி இடங்களை உயர்த்துதல், மருத்துவக் கல்லூரியை அரசேஏற்று நடத்துதல், பற்றாக்குறை பட்ஜெட்டை சரி செய்ய சிறப்புநிதி ஒதுக்கீடு செய்தல், அருகாமைமாவட்ட கல்லூரிகளை அண்ணா மலைப் பல்கலைக்கழகத்துடன இணைத்தல் ஆகிய 5 தீர்வுகளை முன்மொழிந்து அரசுக்கு அனுப்பி வைத்தார்.
2015 முதல் பதவிக்கு வந்த துணைவேந்தர்கள் இந்த பரிந்துரைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டனர். இதன் விளைவாக 2015- ல் ரூ.750 கோடி பற்றாக்குறையில் இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்ஜெட் இன்று ரூ.2,100 கோடியாக உயர்ந்து நிற்கிறது. அதன் ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் மற்றும் மாணவர்களை இந்த நிதிச்சுமை அச்சுறுத்தி வருகிறது.
ஆசிரியர், ஊழியர் அயற் பணியிட மாற்றம் 7 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையாக முடிந்த பாடில்லை. மருத்துவக் கல்லூரி அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்தக் கல்லூரிக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்த பாடில்லை. அதனால் அவர்களுக்கு இந்த அக்டோபர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. சிறப்பு நிதி ஒதுக்கீடு இதுவரை ஏதுமில்லை.
ஆகவே ஆசிரியர், ஊழியர் மற்றும் மாணவர்களின் துயரங்கள் தொடர்கின்றன. இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டன.
நல்ல நிர்வாக சீர்த்திருத்தம் என்று ஒருபுறம் இது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், ஏற்கெனவே நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் பல்கலைக்கழகம் இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்று அங்கிருப்பவர்களே கூறி வருகின்றனர். பணி மாறுதல், அயற்பணியிட மாறுதல், உயர்பதவி நியமனங்கள் உள்ளிட்ட பலவிதங்களில் பல்கலைக்கழக நிர்வாகத்தில் தொடர்ந்து ஊழல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 10 ஆண்டு களாக பொறுமை காத்த பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பு (ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு) 12 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து, தற்போது தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது. தமிழக அரசு இதில் தலை யிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து பாரம்பரியம் மிக்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர், மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.