தமிழகம்

குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

"தமிழகத்தில் கடந்த ஆண்டு பல மாவட்டங்களில் மழை குறைவாக பெய்திருந்தாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி யினர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்து பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை அளவு குறைவாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வினியோகம் சிறப்பாக நடந்து வருகிறது. தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க 88 ஆயிரத்து 267 பணிகள், ரூ.6,240 கோடியில் நடந்து வருகின்றன. ஏரிகளை தூர் வாரவும், தடை இல்லாமல் குடிநீர் வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் தொடர்பாக வாரம் தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் 8 குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அரசாணை மட்டுமே வெளியிடப் பட்டிருந்தது. அவற்றில் 6 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. மீதமுள்ள திட்டங்களும் இந்த ஆண்டில் முடியும். திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் உத்தரவுப்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியில் தேர்தலுக்காக வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. டெண்டர் விடாமல், நிதி ஒதுக்காமல் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் குடிநீர் வழங்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மழை குறைவாக பதிவான 11 மாவட்டங்களில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் அடிப்படையில் ரூ.651.43 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வினியோக பணிகள் நடந்து வருகின்றன. சென்னைக்கு கிருஷ்ணா கால்வாய் மூலம் தற்போது பெறப்பட்ட நீரின் அளவு 5,664 மில்லியன் கன அடி. இந்த மாத இறுதியில் மீண்டும் கிருஷ்ணா நீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட்ட பகுதிகளில் லாரிகளில் குடிநீர் வழங்கும் பணிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 கோடி நிதி வழங்கப்பட்டு இதுவரை ரூ.43 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஊராட்சிகளில் 2012–13ம் ஆண்டு 83 ஆயிரத்து 334 பணிகள், 1,185.12 கோடியில் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் மாநிலம் முழுவதும் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் குறைந்து வரும் வேளையிலும் மாற்றுக் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

SCROLL FOR NEXT