விருது மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும் 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு இம்மாதம் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014-ல் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்தம் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி,
ஊக்கப்படுத்தும் வகையில் 'தமிழ்ச் செம்மல்' என்ற விருதை அறிவித்தார். இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000/- பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த விருது மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் (32 பேருக்கு) வழங்கப்படும். அந்த அறிவிப்பிற்கிணங்க 2016-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் >tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு அவற்றுடன் நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் 20.12.2016 ஆம் நாளுக்குள் அளிக்கப்படவேண்டும்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.