வேலூர் / திருவண்ணாமலை: வடகிழக்கு பருவமழையால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலான மழை பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு, அதை யொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முன்தினம் வலுவிழந்தது. இதன் காரணமாக, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் லேசான மழை பதிவானது. கன மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி காட்பாடியில் 1.3, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 4, வேலூரில் 7.3, விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் பகுதியில் 3.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 வீடுகள் முழுமையான சேதம், 18 வீடுகள் பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக மனிதர்கள் மற்றும் கால்நடை உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. மழை காரண மாக 11 விவசாயிகளின் 5.76 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக் கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: தி.மலை மாவட்டத்தின் பல இடங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரவலான மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதிக பட்ச அளவாக கலசப்பாக்கத்தில் 17 மி.மீ மழை பதிவாகி இருந்தது. ஆரணியில் 4.2, செய்யாறில் 1, செங்கத்தில் 4.8, வந்தவாசியில் 2, போளூரில் 6.4, திருவண்ணா மலையில் 3, தண்டராம்பட்டில் 2.2, சேத்துப்பட்டில் 5.8, கீழ் பென்னாத்தூரில் 15 மி.மீ மழை பதிவாகியுள்ளன.