கொடைக்கானலில் புற்கள் மீது வெண் துகள்களாக படர்ந்த உறை பனி. 
தமிழகம்

கொடைக்கானலில் முன்னதாக தொடங்கிய உறைபனிக் காலம்: இரவில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ்

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சில நாட்களாக இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளதால் கடும் குளிர் நிலவுகிறது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப் பொழிவு குறைந்துள்ளது. இதனால் பகலில் மிதமான வெயிலும், இரவு தொடங்கி அதிகாலை வரை உறை பனியால் கடுங்குளிரும் நிலவுகிறது. கொடைக்கானலில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக இருக்கும் நிலையில், இரவில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 4 நாட்களாக இரவில் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நீடிக்கிறது. நேற்று முன்தினம் இரவு 6.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. கொடைக்கானல் மேல்மலை, ஏரிச்சாலை, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா மற்றும் ஜிம்கானா உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை வெண் துகள்களாய் உறை பனி புற்கள் மீதும் தண்ணீர் மீதும் படர்ந்திருந்தது.

திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி படர்ந்து இருந்தது. ஏரியின் மேல்பகுதி தண்ணீரில் படர்ந்திருந்த பனிப்படலம் பகலில், வெயில் பட்டவுடன் ஆவியாக மாறி வெளியேறுகிறது. வழக்கமாக மார்கழியில்தான் உறைபனிக் காலம் தொடங்கும். இந்தாண்டு முன்கூட்டியே உறைபனிக் காலம் தொடங்கிஉள்ளது.

அதனால், கொடைக்கானல் நகரில் மாலை வேளையில் ஆட்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. ஆனால், வெளிநாட்டினர் இந்தகுளிர்ந்த சூழலை ரசிக்கின்றனர்.

SCROLL FOR NEXT