ராமேசுவரம்: ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் வலையில் சுமார் 1,000 கிலோ எடை கொண்ட ராட்சத யானைத் திருக்கை மீன் சிக்கியது.
பாம்பனைச் சேர்ந்த ரூபன் என்பவருக்குச் சொந்தமான படகில் நேற்று அதிகாலை பாக் ஜலசந்தி கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராட்சத யானைத் திருக்கை மீன் வலையில் சிக்கியது. இந்த மீன் சுமார் 1,000 கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருந்ததால் மீனவர்கள் நாட்டுப்படகில் இருந்து கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது: ராமேசுவரம் கடல் பகுதியில் யானைத் திருக்கை, முள்ளந்திருக்கை, குருவித் திருக்கை, சோனகத் திருக்கை, ஆடாத் திருக்கை, புலியன் திருக்கை, கருவா திருக்கை, பூவாத் திருக்கை, மணற் திருக்கை, வவ்வால் திருக்கை உள்ளிட்ட திருக்கை வகை மீன்கள் உள்ளன.
யானைத் திருக்கையின் உருவம் பெரியதாகவும், தோல் யானையைப் போன்று இறுக்கமாக இருப்பதால் இதற்கு யானைத் திருக்கை என்ற பெயர் உண்டானது. இந்த திருக்கை மீன் அதிக பட்சம் 5 டன் வரையிலும் வளரக்கூடியது. இந்த மீன் ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.