பண மதிப்பு நீக்கம் மற்றும் புயல் பாதிப்பால் 40 ஆயிரம் வாடகை ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 75 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. சொந்தமாக ஆட்டோக்களை ஓட்டுபவர்களை தவிர, சுமார் 40 ஆயிரம் பேர் வாடகை ஆட் டோக்களை ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதனால், மக்களிடன் பணப் புழக்கம் குறைந்துவிட்டது. ஆட்டோ, கால் டாக்சிகளில் பயணம் செய்வது குறைந்துவிட்டது. குறிப்பாக பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் செல்வது கணிசமாக குறைந்துவிட்டது.
இதற்கிடையே, சமீபத்தில் சென்னை, சுற்றுப்புற மாவட்டங் களை தாக்கிய புயலால் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களும் சேதமடைந்துள்ளன. இதனால், ஆட்டோ மற்றும் கால் டாக்சி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாடகை ஆட்டோ தொழிலாளர்கள் போதிய வேலை மற்றும் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வாடகை ஆட்டோ தொழிலாளர்கள் பி.குரு, எஸ்.சிவா ஆகியோர் கூறும்போது, ‘‘பணமதிப்பு நீக்க அறிவிப்பால் அடுத்த சில நாட்களில் இருந்தே எங்களுக்கு பாதிப்பு தொடங்கியது. முன்பெல்லாம் தினமும் ரூ.400 வரை வருவாய் கிடைக்கும். பொதுமக்கள் ஆட்டோக்களில் பயணம் செய்வது கணிசமாக குறைந்துவிட்டது. எங்களுக்கு 50 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டது. சில ஆட்டோ உரிமை யாளர்களே ஆட்டோக்களை ஓட்டி வருகின்றனர். சமீபத்தில் தாக்கிய புயலால் எங்களது வாழ்வாதாரமே போய்விட்டது. தற்போது, நாங்கள் ஓட்டிக் கொண்டிருந்த ஆட்டோவுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால் ஓட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களை போல் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர்’’ என்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் நேற்று கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 75 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தாக்கிய புயலால் பெரும்பாலான இடங் களில் ஆட்டோக்கள் சேதமடைந் துள்ளன. இதுதவிர, மாநகரில் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளுக்கு ஆட்டோக்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாடகை ஆட்டோக்களை ஓட்டி வந்த 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமலும், வருமானம் இன்றியும் தவித்து வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆட்டோ நல வாரியத்தின் மூலம் தமிழக அரசு நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.