தமிழகம்

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் அடுத்த வாரம் பதவியேற்பு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் (55) அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.

தற்போது பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் எஸ்.கே.கவுல், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

கடந்த 1958-ம் ஆண்டு பிறந்த எஸ்.கே.கவுல், டெல்லியில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு களை முடித்தார். டெல்லி பார் கவுன்சிலில் 1982-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட கவுல், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

கடந்த 2001-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கவுல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக் கப்பட்டார். நீதித்துறை சார்ந்த பணிகள் தவிர இசை, கோல்ப் விளையாட்டு போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட கவுல், தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைமை நீதிபதி பதவி யேற்பு விழா அடுத்த வாரத்தில் நடக்கும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT