சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான அவ்வை நடராசன்(87), வயது முதிர்வின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவ்வை நடராசன் மிகச் சிறந்த தமிழறிஞர், சிந்தனையாளர், பேச்சாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்து, தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958-ல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இதன்பிறகு, புதுடெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளராக பணியாற்றினார்.
இதன்பிறகு, அவ்வை நடராசன், தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராக பணியாற்றினார். பின்னர் 1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல் தமிழக அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான். இதுதவிர பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, பேரறிஞர் அண்ணா விருது, மத்திய அரசின் பத்ம விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, பாரதி பல்சுவை, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம் உள்பட பல்வேறு படைப்புகளை வழங்கினார். மறைந்த அவ்வை நடராசனின் மனைவி தாரா நடராசன் ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு மருத்துவர் கண்ணன், முனைவர் அருள், மருத்துவர் பரதன் ஆகிய மகன்கள் உள்ளனர். முனைவர் அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக உள்ளார். அவ்வை நடராசனின் இறுதிச் சடங்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது.
முதல்வர் இரங்கல்: அவ்வை நடராஜனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.