தமிழகம்

சென்னை - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் 130 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கி சோதனை: வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படலாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நாட்டில் அதிநவீன வசதிகளுடன் தற்போது 5 வந்தே பாரத் ரயில்கள் வெவ்வேறு நகரங்கள் இடையே இயக்கப்படுகின்றன. இதில், 5-வது வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தரயில், சென்னை-மைசூர் இடையேஇயக்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. ஆனால், சென்னை- மைசூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 75 முதல் 90 கி.மீ. வேகத்தில்தான் இயக்கப்படுகிறது. நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்களில், இந்த ரயில்தான் குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது. பல இடங்களில் பாலங்கள், வளைவுகள் இருப்பதால், குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேகத்தை அதிகரிக்க ரயில் வழித்தடங்களை மேம்படுத்துவது அவசியமாகிறது.

சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் தற்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில்ரயில்கள் இயக்க தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில்,ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம், இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை இயக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT