இயற்கை, பாரம்பரிய உணவு குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மன்னார்குடி அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநில அளவிலான 24-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கோவையில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 244 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இவற்றில், 30 ஆய்வுக் கட்டுரைகள் வரும் டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் வாராமதியில் நடைபெறும் தேசிய மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டன.
இதில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவி பி.கலாவதி, மாணவர்கள் ஈ.வெங்கடேஷ், கே.சிவராமன், எம்.பிரவீன் மற்றும் டி.வெங்கடேஷ் ஆகியோர் ஆசிரியர் எஸ்.அன்பரசுவின் வழிகாட்டுதலுடன் தயாரித்த ‘இயற்கை உணவும், உடல் நலனும்’ என்ற தலைப்பில் சமர்ப்பித்திருந்த ஆய்வுக் கட்டுரையும், சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பரோட்டா, பானிபூரி, நூடுல்ஸ் மற்றும் குர்குரே, சாக்கோஸ் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு வகைகளான சாமை, குதிரைவாலி, தினை, சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருந்தனர்.
தேசிய மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட மன்னார்குடி பள்ளி மாணவர்களுக்கு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
ஆய்வுக் கட்டுரையை தயாரித்த மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளியின் தலைமையாசிரியர் டி.எல்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமையாசிரியர் முனைவர் எஸ்.சேதுராமன் ஆகியோர் பாராட்டினர்.