அரசியல் கட்சிகளை அணி திரட்டுவதில் வல்லமை பெற்றவராக விளங்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் பெரும்பங்காற்றியவர் சோ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சோவின் மறைவு குறித்து இன்று திருநாவுக்கரசர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''வழக்கறிஞராக, நாடக - திரைப்பட நடிகராக, வசனகர்த்தாவாக, பத்திரிகையாளராக என பன்முகத்திறன் படைத்த சோ ராமசாமி மறைவுச் செய்தி கேட்டு மிக்க துயரமடைகிறேன்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடத்திலும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஒரு நிலை எடுத்து அதற்காக அரசியல் கட்சிகளை அணி திரட்டுவதில் வல்லமை பெற்றவராக விளங்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் பெரும்பங்காற்றியவர்.
கடந்த 46 ஆண்டுகளாக துக்ளக் இதழை நடத்தி, தமிழக பத்திரிகை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஆண்டுதோறும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவை நடத்தி, வாசகர்களின் விமர்சனங்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுகிற புதுமையை புகுத்தியவர். நம்பகத்தன்மை மிக்க பத்திரிகையாளராக விளங்கியவர்.
துக்ளக் இதழின் வாசகர்களின் கேள்வியும், அவற்றிற்கான சோவின் பதிலும் மிகவும் பிரசித்தி பெற்றவை. புராணங்கள், இதிகாசங்கள் ஆகியனவற்றில் சோவின் ஈடுபாடு அளப்பரியது. நகைச்சுவை அவரது பலம். அனைவரிடமும் அன்போடு, இனிமையாக பழகக் கூடியவர்.
பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்தவராய், நிலையான புகழுக்குரியவராய் திகழ்ந்த சோ ராமசாமியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலையுலகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், எனது சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.