இந்தியாவில் ஆன்மிக சாதனையை மீண்டும் உருவாக்கு வதற்கான நேரம் இது என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் நேரடியாக யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகள் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இருக்கும் 63 முக்கிய நகரங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் மொத்தம் 21 ஆயிரத்து 786 பேர் பங்கேற்றனர்
சென்னையில் அடையாறு, அம்பத்தூர், அண்ணா நகர், குரோம்பேட்டை, மேடவாக்கம், மயிலாப்பூர், நங்கநல்லூர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், பூந்தமல்லி, தாம்பரம், வளசரவாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்றன. சென்னையில் மட்டுமே 3600-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற வகுப்பில் 4000 பேர் பங்கேற்றனர்.
அமைதிப் புரட்சி
இந்த பயிற்சி வகுப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:
சில தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவில் ஒவ்வொரு வருக்கும் ஆன்மிக சாதனை இருந்தது. அதனை மீண்டும் உருவாக்குவதற்கான நேரமிது. 36 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த தன்னை உணர்தலுக்கான அமைதிப்புரட்சி இனியும் அமைதியாகவில்லை. கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. பல பேரின் உயிர்களை, இத்தனை சக்தியாய் தொடுவதற்கான ஒரு வாய்ப்பு பல தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இதனை நாம் நிகழச் செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரின் கேள்விகளுக்கு சத்குரு தெளிவாகவும் நகைச் சுவையோடும் பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி பயிற்சிகளும், ஈஷா இசை குழுவின் வாத்திய இசையும் நடைபெற்றது.
10 ஆயிரம் மரக்கன்றுகள்
சென்னையில் நடைபெற்ற வகுப்புகளில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு இலவசமாக சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனை நட்டு, பாதுகாத்து வளர்க்க அனைவரும் உறுதி எடுத்தனர்.