செந்தில் பாலாஜி 
தமிழகம்

மின்வாரிய மேம்பாட்டு பணிக்கு மட்டுமே ஆதார் இணைப்பு: செந்தில்பாலாஜி விளக்கம்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: மின்வாரியத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக மட்டுமே மின் நுகர்வோரிடம் ஆதார் இணைப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது, எந்தவித மாற்றமும் இன்றி இலவச மின் திட்டங்கள் தொடரும் என்று, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளக்காபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை, வடிகால், சுகாதார வளாகம், பள்ளி வகுப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ.1.16 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம், சார் ஆட்சியர் வி.பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, "அரசின் மீது ஏதாவது ஒருவகையில் குற்றம் சுமத்த வேண்டும், மக்களிடத்தில் அவதூறு பரப்ப வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. மின் நுகர்வோரிடத்தில் ஆதார் எண் இணைப்பு என்பது, மின்வாரியத்தை நிகழ்காலத்துக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான நடவடிக்கை. ஒரு கோடியே 15 லட்சம் பேரின் தரவுகள் மட்டுமே இருந்தது.

3 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்களின் விவரங்கள் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு மின் இணைப்புகளில் எவ்வளவு பேர் பயனடைந்து இருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட வேண்டும். உற்பத்தி, கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்தால்தான், மின்வாரியத்தை மேம்படுத்த முடியும். மின்வாரியத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக மட்டுமே, மின் நுகர்வோரிடம் ஆதார் இணைப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்பது அவதூறான கருத்து. இது ஏற்புடையது அல்ல. ஆதார் இணைப்பு என்பது கட்டாயம். 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சார விநியோகத்தில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மின்வாரியத்திடம் 2 லட்சம் மின்கம்பங்கள், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் மாற்றிகள் கையிருப்பில் உள்ளன. பழுதடைந்த 44 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. மழைக்காலத்திலும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில், கோவையில் நடைபெற்ற பணிகளைவிட இரண்டு மடங்கு பணிகள் இந்த 5 ஆண்டுகளில் நடைபெறும். கோவை வளர்ச்சி பெறுவதற்கான திட்டங்கள் நிச்சயம் வழங்கப்படும்.

விமான நிலையம் விரிவாக்கம் எத்தனை ஆண்டு கோரிக்கை, தற்போது முதல்வர் ஒரே ஆண்டில் அதற்கான நிதியை அளித்து, 90 சதவீத நில எடுப்பு பணி நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT