தமிழகம்

நோட்டு விவகாரத்தில் கூட்டுறவுத் துறை உரிமையை மறுப்பது ஏன்?- திருநாவுக்கரசர்

செய்திப்பிரிவு

கூட்டுறவுத்துறை வங்கிகளுக்கு செல்லாத ரூபாய் நோட்டைப் பெறுவதற்கான உரிமையை தர மறுப்பது ஏன்? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பண மதிப்பு நீக்கத்தால் கூட்டுறவுத் துறை வங்கிகளை முடக்குகிற வகையில் சில நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக மத்திய பாஜக அரசு செய்திருக்கிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்டு கூட்டுறவு வங்கிகள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. இந்தியா முழுமைக்கும் 369 மாவட்டங்களில் 13,943 மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளில் தற்போதைக்கு ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 803 கோடிக்கு பொது மக்களின் வைப்பு நிதி உள்ளது. அதேபோல இந்த வங்கிகள் ரூ.2 லட்சத்து 79 ஆயிரம் கோடிக்கு கடனும் வழங்கியுள்ளன.

தமிழகத்தில் 813 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் ரூ.22 ஆயிரத்து 660 கோடிக்கு கிராமப்புற மக்களின் வைப்பு நிதி உள்ளது. விவசாயிகளுக்கு கடனாக ரூ.29 ஆயிரத்து 95 கோடிக்கு வழங்கியுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக மாநில கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் என மூன்றடுக்கு முறையில் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளானது தங்களுக்கு கீழுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு கடன்களை வழங்குகிறது. அந்த சங்கங்கள் தமது உறுப்பினர்களிடம் வைப்பு நிதியை பெறவும், அவர்களுக்கு கடன்களை வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களுக்கான நிதியானது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் செல்லாத பணத்தை மாற்றிக் கொடுக்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதிர்ச்சி செய்தி சமீபத்தில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் என்றால் மாநில கூட்டுறவு வங்கிகளும், நகர கூட்டுறவு வங்கிகளும் மட்டுமே என்று மத்திய பாஜக அரசு வெளியிட்ட அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடந்த நவம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதனுடைய 813 கிளைகள் மற்றும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற பயிர்க்கடனை கிராமப்புறங்களில் வழங்குவதில் பெரும் பங்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செய்து வருகின்றன.

தொடக்க காலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தான் அனுமதி வழங்கி கண்காணித்து வந்தது. 1982 ஆம் ஆண்டு முதல் கூட்டுறவுத் துறை வங்கிகளை நிர்வகிக்கிற பொறுப்பு நபார்ட் வங்கியிடம் வழங்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவர்தான் நபார்ட் வங்கியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் செல்லாத ரூபாய் நோட்டை பெறுவதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை, கூட்டுறவுத்துறை வங்கிகளுக்கு மறுப்பது ஏன் ? ஏன் இந்த பாரபட்ச நிலை ?

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலிருந்து பணத்தை எடுக்கவோ, வாங்கிய கடனை திரும்ப செலுத்தவோ, கடனை திரும்ப பெறவோ முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயத்திற்கு தேவையான இடுபொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு, விவசாய தொழிலே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் 2011 இல் ரூ.26 ஆயிரத்து 247 கோடியாக இருந்த வைப்புத் தொகை 2016 இல் ரூ.54 ஆயிரத்து 914 கோடியாக உயர்ந்திருக்கிறது. இத்தகைய வளர்ச்சியைப் பெற்ற கூட்டுறவு வங்கிகளை முடக்குகிற வகையில் இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு தீவிர முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகிற 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் நம்பகத்தன்மையை இழந்து செயலற்ற நிலைக்கு தள்ளப்படும் என எச்சரிக்க விரும்புகிறோம்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக கிராமப்புற பொருளாதாரத்தில் கடன் வழங்குவதில் முதுகெலும்பாக இருந்து செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளை முடக்குகிற வகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT