ஒரே நாளில் அடுத்தடுத்து சரமாரியாக வந்த புகார்களால் தேர்தல் துறை அலுவலகம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரி சீலனை, கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் பல்வேறு காரணங்களால் சுயேச்சைகள் மற்றும் கட்சி வேட்பாளர்கள் 350-க்கும் அதிகமானோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை காலையில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் வந்தும் பேக்ஸ் மூலமும் ஏராளமானோர் புகார் அளித்தனர்.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் சசிபெருமாள், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் ஒரு மனு கொடுத்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறுகையில், ‘‘தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரி வருகிறேன். மதுவால் தகராறுகள் நடக்கும். மதுபோதையில் பலர் ஓட்டு போட வரமாட்டார்கள். அதனால் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு ஒருவர் மட்டும் பரிந்துரை செய்தால் போதும் என்கின்றனர். ஆனால் பதிவு பெற்ற கட்சியினரோ சுயேச்சைகளோ மனு தாக்கல் செய்ய 10 பேரின் பரிந்துரை கேட்கப்படுகிறது. இது முரண்பாடான விஷயம். இதைச் சரி செய்ய வேண்டும்’’ என்றார்.
பட்டாபிராமைச் சேர்ந்த அகில பாரத இந்து மகா சபை கட்சிப் பிரமுகர் இல.கணபதி அளித்துள்ள மனுவில், ‘தென்சென்னையில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட என் மனுவில் சிறிய பிழை மட்டுமே இருந்தது. அதை திருத்துவதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி அவகாசம் தரவில்லை’ என்று கூறியுள்ளார்.
மத்திய சென்னையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட எஸ்.கந்தசாமி என்பவர், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேர்தல் நடத்தும் அதிகாரி எனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். 7-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது என்று எனக்கு தகவல் தெரிவிக்கவே இல்லை’ என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். (வேட்பு மனு படிவத்திலேயே பரிசீலனை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அவர் சரியாக பார்க்க வில்லை என்று தேர்தல் துறையினர் விளக்கம் அளித்தனர்.)
மக்கள் மாநாடு கட்சியைச் சேர்ந்த கே.பி.சதீஷ்குமார் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘சமக தலைவர் சரத்குமார், சட்ட மன்றத்தில் அதிமுக உறுப்பின ராக உள்ளார். தற்போது அதிமுக வுக்காக பிரச்சாரம் செய்து வரும் அவர், நட்சத்திர பேச்சாளர் பட்டிய லில் இடம்பெறவில்லை. ‘விடுதலை’ பத்திரிகையை நடத்தி வரும் கி.வீரமணி, திமுகவுக்காக பிரச்சாரம் செய்கிறார். இது தேர்தல் விதிகளுக்கு மாறானது. எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டி ருந்தார்.
புழல் பகுதியில் வசிக்கும் தமது கட்சி வழக்கறிஞரை பிரச்சாரத் துக்கு போகக் கூடாது என போலீஸ் அதிகாரிகள் மிரட்டுவாக திமுக சார்பில் வழக்கறிஞர் பரந்தாமன் புகார் மனு கொடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து வேட்புமனு நிராகரிப்பு மற்றும் விதிமீறல்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு தொலைபேசியிலும் பேக்ஸிலும் தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்தது. இதனால், தேர்தல்துறை அலுவலகம் செவ்வாய்க்கிழமை பரபரப்பாக காணப்பட்டது.